search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர் சிலை"

    அயோத்தி நகரில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என வலியுறுத்தி இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடிய தர்மசபா ஆலோசனை கூட்டம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. #Ayodhyadispute #VHPDharamSabhasponsored #AyodhyaDharamSabha #Ramtemple
    லக்னோ:

    ராமர் பிறந்த இடமான அயோத்தி நகரம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது. இங்கு ராமருக்கு கோவில் கட்டப்பட்டு இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதாக கூறி இந்து அமைப்புகள் கரசேவை நிகழ்ச்சியை நடத்தின.  

    இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி பாபர் மசூதியை இடித்ததுடன் அந்த இடத்தில் சிறிய வடிவிலான ராமர் கோவிலையும் கட்டினார்கள். அங்கு பெரிய அளவில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று இந்து அமைப்பினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    ராமர் கோவில் கட்டுவது சம்பந்தமாக உடனே கோர்ட்டு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று இந்து அமைப்புகள் வற்புறுத்தி வந்தன. ஆனால், உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது என கூறி ஜனவரி மாதத்துக்கு வழக்கை  சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்தது.

    இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தி விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பினர் அயோத்தியில் இன்று தர்மசபா என்ற நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்தனர். இதற்காக நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த தொண்டர்களும், ராம பக்தர்களும் அயோத்தியில் குவிந்தனர்.

    புகழ்பெற்ற சாமியார்களான ஜெகத் குரு ராமானந்தசாரியா, சுவாமி ஹன்ஸ்தேவ சாரியா, ராம்பத்ரசாரியா, ராமேஸ் வர்தாஸ், வைஷ்ணவ், மகாந்த் நிரித்திய கோபால் தாஸ் மற்றும் ஏராளமான சாமியார்கள் பங்கேற்றனர். இவர்களின் பேச்சை கேட்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களும் திரண்டனர்.

    இது தவிர, விசுவ இந்து பரி‌ஷத் தலைவர்கள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    ராமஜென்ம பூமிக்காக கட்டுமான பொருட்களை தயார் செய்யும் இடமான நயாஸ் ஒர்க்‌ஷாப் அருகில் உள்ள படேபக்த்மால் கிபாகியா என்ற  இடத்தில் இந்த தர்மசபா நிகழ்ச்சி நடந்தது.



    பகல் 12.30 மணியளவில் தர்மசபா நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தலைவர்களும், சீயர்களும் உரையாற்றினர்.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தலைவர் கிருஷ்ண கோபால், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் இந்த தர்மசபை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் (ஆர்.எஸ்.எஸ்.) கட்டுப்படுவோம். இங்கு கோவில்  கட்டும்வரை நாங்கள் ஓய்ந்திருக்க மாட்டோம் என்றார்.

    அடுத்து பேசிய சுவாமி ராம்பத்ராச்சாரியா, ராமர் கோவிலை இங்கு கட்டுவது தொடர்பாக கடந்த 23-ம் தேதி நான் மூத்த மத்திய மந்திரி ஒருவருடன் பேசி இருக்கிறேன். டிசம்பர் 11-ம் தேதி பிரதமர் மோடியுடன் இவ்விவகாரம் தொடர்பாக பேசுவதாக அவர் உறுதியளித்திருக்கிறார். கோவில் கட்டுவதற்காக ஒரு சட்டம் வரும் என நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் என்னிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் சுவாமி ராம்பத்ராச்சாரியா கூறினார்.

    நிறைவுறைவாற்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய தலைவர் சம்பத் ராய், அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மொத்த நிலமும் ராமர் கோவில் கட்டுவதற்காக எங்களுக்கு தேவை. இதற்கு ஒத்துழைக்கும் வகையில் முஸ்லிம்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் போடப்பட்டுள்ள வழக்கை அவர்கள் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

    தற்போது இங்கு கூடியுள்ள மாபெரும் பக்தர்கள் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 45 மாவட்டங்களில் இருந்துமட்டும் வந்துள்ள கூட்டம். அடுத்த தர்மசபா கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பின்னர், இன்றைய ஆலோசனை கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. ராமர் கோவிலை கட்டுவதற்கு சட்டம் இயற்ற வேண்டும். அல்லது, அவசர சட்டம் கொண்டுவந்து கோவிலை கட்டிமுடிக்க வேண்டும் என்பதுபோன்ற எழுத்து வடிவிலான தீர்மானம் ஏதும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை. #Ayodhyadispute #VHPDharamSabhasponsored #AyodhyaDharamSabha #Ramtemple
    உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க இருப்பதாக தலைமைச் செயலாளர் அவானிஸ் தெரிவித்துள்ளார். #RamStatue #UP
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ராமருக்கு உயரான சிலை அமைக்கப்படும் என்ற செய்தி உலாவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் (தகவல்) அவானிஷ் அவாஸ்தி இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

    ‘‘ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். இதில் அவரது உருவம் 151 மீட்டர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீட்டரிலும், பீடம் 50 மீட்டரிலும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

    அத்துடன் பீடம் பகுதியில் மியூசியம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், ‘‘இந்த வேலையை தொடங்குவதற்காக ஐந்து நிறுவனங்களை தேர்வு செய்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும். அத்துடன் மணல் உறுதி சோதனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.



    குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை விட உயரமான சட்டசபை கட்ட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.   #RamStatue #UP
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று வலியுறுத்தியுள்ளார். #Ramtemple #UddhavThackeray #Ayodhyarally
    லக்னோ:

    அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது.

    2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழிவகை செய்யப்படும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா மற்றும் சங்பரிவார் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.  

    ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா ஆகிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிகப்பிரமாண்ட பேரணி நடத்த விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். அயோத்தியில் பேரணி நடத்த போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இதுதவிர, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அறிவிப்பை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் மிக தீவிரமாக உள்ள சிவசேனா சார்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை தனியாக ஒரு பேரணி நடத்தப்படுகிறது.

    இந்த பேரணிக்கு தலைமை தாங்குவதற்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பிற்பகல் அயோத்தி நகருக்கு வந்தார். சரயு நதியில் புனித நீராடிய அவர் தனது மகனுடன் நதிக்கரையில் நடந்த ஆரத்தி பூஜையில் கலந்து கொண்டார்.



    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அயோத்தியில் ராமர்  கோவிலை எப்போது கட்டும்? என்ற தேதியை குறிப்பிடுமாறு வலியுறுத்தினார்.

    நாட்கள் கடந்து, மாதங்கள் கடந்து, ஆண்டுகள் கடந்து, தலைமுறைகளும் கடந்துபோய் விட்டது. அயோத்தியில் கோவில் கட்டுவோம் என்று மட்டும் சொல்லும் நீங்கள் அந்த தேதியை ஏன் சொல்வதில்லை? என்று மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.

    ஸ்ரீராமஜென்ம பூமியான அயோத்தியில் ராமருக்கு கோயில் அமைத்தே தீரவேண்டும். ராமர் கோவில் கட்டும் தேதியை முதலில் நீங்கள் அறிவியுங்கள். மற்றவற்றைப் பற்றி எல்லாம் நாம் பிறகு பேசிக் கொள்ளலாம்.

    இதற்காக, கடந்த நான்காண்டுகளாக தூங்கி கொண்டிருக்கும் கும்பகர்ணனை (மோடி தலைமையிலான மத்திய அரசு) எழுப்புவதற்காக நான் முதன்முறையாக இப்போது அயோத்திக்கு வந்திருக்கிறேன்  என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார். #Ramtemple #UddhavThackeray #Ayodhyarally  
    சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #RamStatue #SamajwadiParty

    லக்னோ:

    குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக படேல் சிலை 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று சாமியார் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

    இதை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவர் அயோத்திக்கு வர உள்ளார். அங்கு சிறப்பு தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் அவர் பங்கேற்கிறார்.

    அப்போது சிலை அமைப்பதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிலை 152 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த சிலை படேல் சிலையை விட 30 மீட்டர் உயரம் குறைவாக இருக்கும்.

     


    அயோத்தி சரயூ நதி ஓரமாக சிலை அமைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். எந்த இடத்தில் சிலை அமைப்பது என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

    இதற்கிடைய சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமான சிலையை ராமருக்கு அமைக்க வேண்டும் என்று சமாஜ் வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் கூறியதாவது:-

    படேல் சிலை அமைக்க திட்டமிட்டபோதே ராமர் சிலையையயும் அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கலாம். அதை யார் தடுத்தது.

    படேல் சிலையை விட ராமருக்கு சிறிய சிலையை அமைக்க திட்டமிடுகிறார்கள். அதாவது பிரதமர் அமைத்த சிலையைவிட உயரமான சிலை அமைக்க கூடாது என்ற எண்ணம் உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு உள்ளது. அவ்வாறு இருக்க கூடாது.

    சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட ராமர் சிலை உயரமாக கட்டப்பட வேண்டும். அயோத்தியில் மட்டுமல்ல ராம்பூரிலும் ராமருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RamStatue #SamajwadiParty

    உத்தரபிரதேசத்தில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.330 கோடி செலவிடப்படுகிறது. #UPGovt #RamaStatue #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி அயோத்திக்கு செல்ல உள்ளார்.

    அங்கு அவர் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்.

    அந்த சமயத்தில் அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்திரநாத் பாண்டே கூறியதாவது:-


    முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் துறவி ஆவார். ஆயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண புதிய திட்டம் ஒன்றை அவர் தயாரித்துள்ளார். அந்த திட்டத்தை அவர் வருகிற 6-ந்தேதி தீபாவளி தினத்தன்று அயோத்தியில் வெளியிட உள்ளார்.

    அதுமட்டுமின்றி அயோத்தியில் மியூசியம், கலை அரங்கம், விமான நிலையம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாகவும் முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதியாகும்.

    உத்தரபிரதேசத்தில் ராமருக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டமும் உள்ளது. சரயூ நதி கரையில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்.

    இதற்காக ரூ.330 கோடி செலவிடப்படும். 36 மீட்டர் உயர பீடத்தில் ராமர் சிலை நிறுவப்படும். இதுபற்றிய அறிவிப்பையும் 6-ந்தேதி முதல்-மந்திரி வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்புகள் வெளியிட்ட பிறகு மிகப்பெரிய ரத யாத்திரை பிரசாரம் மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் அத்வானி நடத்திய ரத யாத்திரை போன்று இந்த யாத்திரை அமையும் என்று கூறப்படுகிறது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தேதியை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #UPGovt #RamaStatue #YogiAdityanath
    உத்தரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்டமான ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியில் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்து இருந்த பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் இறுதி முடிவு ஏற்படவில்லை. இது தொடர்பான வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்ட ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், அயோத்தியில் சரயு நதிக்கரையில் மிக பிரமாண்டமாக 107 மீட்டர் உயரத்தில் (351 அடி) ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை 44 மீட்டர் (144 அடி) உயரம் உள்ள பீடத்தில் வைக்கப்படுகிறது. ஆக சிலை, பீடம் இரண்டும் சேர்ந்து மொத்த உயரம் 151 மீட்டர் (495 அடி) ஆகும்.



    இந்த சிலையை சரயு நதிக்கரையில் சரியாக எந்த இடத்தில் வைப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ராமர் சிலை வெண்கலத்தில், டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த சிற்பியால் உருவாக்கப்படுகிறது. இந்த சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையின்போது திறந்து வைக்கிறார்.

    சிலை வைக்கப்படுகிற இடத்தையொட்டி, அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒரு கலைக்கூடமும், கலை அரங்கமும் இடம் பெற்றிருக்கும்.

    அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் ராமபிரானின் ஒட்டுமொத்த வாழ்வு சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் இடம் பெறும். கலையரங்கைப் பொறுத்தமட்டில் நாட்டின் பல்வேறு அமைப்புகளும் ‘ராம்லீலா’வை அரங்கேற்றுவதற்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். கலையரங்கில் ‘லேசர்’ படக்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
    ×